சென்னை:தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் 'தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிப்போம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிராக ஆங்கிலத்தில் அடுக்கடுக்காக விமர்சனங்கள் வைத்தார்.
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது எனவும் மாநில உரிமைக்கு எதிரானது எனவும் கூறினார். புதியக் கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு, பேசிய அவர் தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், 3ஆவது மொழியை கற்க எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை எனவும்; ஆனால் மொழி திணிப்பை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.