ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல அது ஒரு நிறுவனப் படுகொலை என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்யக்கோரியும், ஐஐடியில் தொடரும் தற்கொலைகளைத் தடுக்கக் கோரியும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில், சென்னையைச் சேர்ந்த கேரள பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கிண்டியிலுள்ள ஐஐடியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அது 9ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் பயன்படுத்திய செல்ஃபோனில், தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மாணவி தற்கொலை செய்து இன்றுடன் 12 நாட்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை காவல் துறையினர் உருப்படியான விசாரணையை மேற்கொள்ளவில்லை. மாணவியின் செல்ஃபோனில் உள்ள குறிப்பில், ’மேலும் தகவலுக்கு நோட்சை பார்க்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.