சென்னை:கடந்த ஜூன் மாதம் கேரள மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி இருந்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தீவிரவாத கும்பலை தீவிரமாக கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலக் குழு திருச்சூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் கும்பலின் தலைவன் சையத் நபில் அஹமதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அவர் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மாறி மாறி தலைமறைவாக இருந்து வந்தாக தகவல் கிடைத்து வந்த நிலையில், சையத் நபில் அஹமதை கைது செய்ய சிறப்புக் குழுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அமைத்து சென்னையில் ரகசியமாக தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சிறப்புக் குழு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் சையத் நபில் அஹமதை கைது செய்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட தீவரவாத அமைப்பின் தலைவன், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நேபாள் நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டது விசாரனையில் தெரிய வந்துள்ளது.