பொதுவாக புத்தகக் காட்சிக்கு வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே செல்வர். ஆனால் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு வாசிப்பில் விருப்பமில்லாதவர்களும் அதற்கு நேரமில்லாதவர்களும் சென்று வரலாற்றைப் பார்த்து, அனுபவித்து, உணர்ந்து கற்றுவரலாம்.
43ஆவது புத்தகக் காட்சி நடைபெறும் நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதான வளாகத்தில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக கீழடி வரலாற்றை உலகுக்கு பறைசாற்றும் வகையில் சிறப்புக் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 2,600 ஆண்டுகள் பழமைவாய்ந்த கீழடி நாகரிகத்தைப் பற்றியும், அதன் பெருமையைப் பற்றியும் மக்கள் அறியும் வண்ணம், கீழடியில் கிடைக்கப்பெற்ற மண்பாண்ட பொருள்கள், போர்க் கருவிகள், அங்கு பயன்படுத்தப்பட்ட தாது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள், கண்ணாடி பெட்டியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட பொருள்கள், அதில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் பிராமி எழுத்துகள், பாண்டங்களில் கீச்சுகள், குறியீடுகள் ஆகியவை அங்கு வைக்கப்பட்டிருந்தன. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறுகளின் மாதிரி வடிவமும் அங்கு இடம்பெற்றிருந்தது.
இதன்மூலம் கீழடி நாகரிகத்தில் புவியியல், வரலாறு, பொருளாதாரம், அறிவியல், நீர் மேலாண்மை, இலக்கியம், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றை படிக்க ஆர்வமில்லாதவர்கள், அது குறித்து காட்சி மூலமாகவே எளிதாக அறிந்துகொள்ள முடியும். கீழடிக்கு நேரடியாகச் செல்ல முடியாதவர்களும், அங்கு நேரில் சென்று பார்த்து மகிழும் வண்ணம், விர்ச்சுவல் ரியாலிட்டி என்றழைக்கப்படும் மெய்நிகர் யதார்த்தம் தொழில்நுட்பம் மூலமும், ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலமும் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதனை சிறியவர்கள்முதல் வயதானவர்கள்வரை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர். இதன்மூலம் தாங்களே கீழடிக்கு சென்று வரலாறை உணர முடிந்ததாகவும், அந்தக் காலகட்டத்துக்கே செல்ல முடிந்ததாகவும் முதல்முறையாக விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை அனுபவித்த முதியவர் ஒருவர் சிலாகித்தார். விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் கீழடிக்கு சென்ற பொதுமக்கள் இதையும் படிங்க: 'நாட்டை துண்டாட நினைக்கும் காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக செயல்படுவது ஏன்?'