சென்னை:தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து நாளை (நவ. 18ஆம்) தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை வரை (Heavy Rain) பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மழைக்காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவிப்பைப் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், "மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு.
நாளை (நவ. 18ஆம்) தேதி அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும், கனமழையை எதிர்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.