சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி அதிமுக சார்பில் போட்டியிட்டு ஆயிரத்து 91 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், வேட்புமனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி.வீரமணிக்கு எதிராக குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது வேட்பு மனுவில் தவறான பான் நம்பரை குறிப்பிட்டிருந்தார்.
அவரது சொத்து விவரங்கள் வருமான வரி கணக்குடன் ஒத்துப்போகவில்லை. தவறாக தகவல் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.