வேலூர்:வங்கக் கடலில் மிக்ஜாம் புயலானது தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வடதமிழ்நாடு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரயில்வே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் விரைவு ரயில், அதிவிரைவு ரயில்களை ரத்து செய்து அறிவித்துள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி மார்க்கமாகச் செல்லும் விரைவு ரயில்களான காக்கிநாடா விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னைக்கு செல்லவிருந்த லால்பார்க் விரைவு ரயில், இன்டர்சிட்டி விரைவு ரயில், மைசூர் எக்ஸ்பிரஸ், சதாப்தி விரைவு ரயில், ஜோலார்பேட் பயணிகள் ரயில் உள்ளிட்ட சென்னை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை செல்லக்கூடிய ரயில்கள் பெரும்பான்மையாக ஆவடி, பெரம்பூர் வழித்தடங்களில்தான் இயங்கி வருகிறது. தற்போது அந்த வழித்தடங்களில் அமைந்துள்ள ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அந்த தடங்களில் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காட்பாடியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டது.