சென்னை: சென்னையில் இருந்து இலங்கை வழியாக, சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்திச் செல்ல முயன்ற சுறா மீன்களின் துடுப்புகளைச் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கரூரைச் சேர்ந்த பயணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் இருந்து இலங்கை செல்ல இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் (நவ.09) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, பாதுகாப்பு சோதனை பகுதியில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பரிசோதித்தனர்.
அப்போது இந்த விமானத்தில், இலங்கை வழியாகச் சிங்கப்பூருக்குச் சுற்றுலாப் பயணிகள் விசாவில் பயணம் செய்ய வந்திருந்த, கரூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது (58) என்ற பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடைமைகளை முழுமையாகப் பரிசோதித்தனர். அவர் வைத்திருந்த பை உள்ளே 20 கிலோ, மருத்துவ குணம் உடைய, சுறா மீன்களின் துடுப்புகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.