கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த புகாரின்பேரில், கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த தொகுப்பாளர் சுரேந்தர், செந்தில்வாசன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில், சுரேந்தரனைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கச் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
சுரேந்தர் குண்டாசில் அடைப்பு: உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்!
கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலின் தொகுப்பாளர் சுரேந்தர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சுரேந்தரனின் மனைவி கிருத்திகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும், பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.
ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அவசர கதியில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்டப்படியும், இயற்கை நீதிக்கும் முரணானது" என்று கிருத்திகா மனுவில் கூறியுள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.