சென்னை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தமிழ் மொழிக்கான பங்களிப்பை போற்றும் வகையில் 81 கோடி ரூபாய் மதிப்பில் 134 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்து, தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். இதே போல் இதற்கு முன்னர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த சூழலில் சென்னை சேப்பக்கத்தில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் அமர்வு முன் இந்த மனு மற்றும் வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கடலோர ஒழுங்குமுறை மண்டல வகைப்பாட்டில் CRZ 1A என்ற பிரிவில் வரும் பகுதியை CRZ 4A என கூறி நினைவு சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக ராம்குமார் ஆதித்யன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.