சென்னைராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, இந்த மாநாட்டுப் பணிகளுக்காக 9 குழுக்கள் கொண்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டிற்கான அழைப்பிதழ் தயாரித்தல் குறித்தும், மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான அச்சாரமாகவும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையிலும், ஆளும் திமுகவிற்கு நாம் யார் என்று நிரூபிக்கும் வகையிலும் இந்த மாநாடு அமைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநாட்டின் மேடை மற்றும் முகப்புக்காக, டெல்லி செங்கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நாடாளுமன்றம், போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட மாதிரிகள் கொண்டு வரப்பட்டன. அதனை எடப்பாடி பழனிசாமி உட்பட்ட குழு உறுப்பினர்கள் பார்த்து இறுதி செய்தனர். இன்னும் மாநாட்டிற்கு சரியாக ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, குழு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.