தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Coromandel Express: கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் ரத்து - திமுக அறிவிப்பு - ஒடிசா ரயில் விபத்து

ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை ஒத்தி வைத்துள்ளதாக திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DMK
திமுக அறிவிப்பு

By

Published : Jun 3, 2023, 8:19 AM IST

சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு கிட்டத்தட்ட 15-க்கும் அதிகமான பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நேற்றிலிருந்து மீட்புப் பணியானது பொது மக்களின் உதவியுடன் விடிய விடிய நடந்து வருகிறது.

மேலும் அந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் ஒடிசா முழுவதும் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு, அரசு விழாக்கள் அனைத்து ஒத்தி வைத்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாடக் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதலையும், தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும், லேசான காயங்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஒடிசா முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழந்த வருத்தத்தை தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்தார். தற்போது தமிழ்நாட்டில் இன்று (ஜூன் - 3) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு பல நாட்களுக்கு முன்பிலிருந்தே, திமுக சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான பணிகள் நடந்து வந்தது.

அதாவது சென்னை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த விழாவில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள், பல அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதாக இருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தது.

தற்போது ஒடிசா ரயில் விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளதால், கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி தவிர்த்து, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், வேறு ஒரு நாளில் மீண்டும் இப்பொதுக் கூட்டம் நடைபெறும் எனவும் திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் - நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பி பாடுபட்ட கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் முடிவு செய்துள்ளார்.

ஆகவே, இன்றைய நாள் கருணாநிதி சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, கருணாநிதியின் 100வது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

இன்று வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Coromandel Express : சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து!

ABOUT THE AUTHOR

...view details