சென்னை, பாரிமுனையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளையொட்டி வேருக்கு விழா என்ற பெயரில் 1300 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொருட்கள் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடிகளுக்கு ஒரு பொற்கிழி மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்பட திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், 1300 கழக மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யும், நமக்கெல்லாம் வேராக இருந்து கலைஞர் நம்மை இயக்கி வருகிறார் என்றும் மேலும் நம் கழகத்தின் வேராக இருக்கக்கூடிய மூத்த தொண்டர்களை பெருமைப்படக் கூடிய வகையில் இத்தகைய விழா கொண்டாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் தாங்கள் ஆற்றிய பணிக்கு எதுவும் சமம் ஆகாது எனவும்; தங்களை கௌரவப்படுத்துவதன் மூலம் எங்களது பணியை மேலும் சிறப்பாக செயல்படுத்த இது போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் முதலமைச்சராக நான் அமைச்சர்கள், மேயர், துணை மேயர், மக்கள் பிரதிநிதி என நமது கழக தோழர்கள் பொறுப்புக்கு வரக்காரணம் நீங்கள் தான் என்றும்; அவர்களுக்கு கழகம் துணைநிற்கும் எனவும் திமுக நிர்வாகிகளும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பிறந்தநாள் அவருக்காக(கலைஞருக்காக) கொண்டாடப்படவில்லை எனவும்; மக்களுக்காகவே அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதாகவும் அவரது பிறந்த நாளில் ஏராளமான நலத்திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஏழை எளிய மக்கள் சிறுபான்மையினர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.