சென்னை: மதுரையில் 200 போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “மதுரையில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தொடர்புடைய உளவுத்துறை மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து காவல் துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளோம்.
இதனை உடனே மேற்கொள்ள வேண்டும், காலம் தாழ்த்தினால் இந்த போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 187 நாடுகளில் இருந்து செஸ் வீரர், வீராங்கனைகள் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு வரவுள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த கரு. நாகராஜன் அதே நேரத்தில் இது தொடர்பான வரவேற்பு விளம்பரங்களில் முதலமைச்சருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர், செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம் பெற வேண்டும். இல்லை என்றால் பாஜக சார்பில் பிரதமர் மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்படும். இதற்கு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து அரிசி, நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மீது ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு , “இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பவில்லை. பிராண்டட் உணவு பொருள்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய பட்சத்தில் அடுத்து நடைபெறக்கூடிய ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் கருத்துக்களை தெரிவித்தால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கலாம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கண்டனம் தெரிவித்த அவர், மாநில அரசு தமிழ்நாடு மின்வாரியத்திற்கு அறிவித்த மானிய தொகையை கடந்த காலங்களில் விடுவிக்காமல் இருந்ததே கடன் சுமைக்கு காரணம் என்றார். மேலும், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். எனவே மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் 500 இடங்களில் விளையாட்டு பிரிவிற்கு சான்றிதழ் சரிபார்ப்பு