தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

சென்னை: வருமானத்தை மறைத்ததாக வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கை எதிர்த்து காங்கிரஸ் எம்பி கார்த்தி, சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

karthi chidambaram case dismissed
karthi chidambaram case dismissed

By

Published : May 12, 2020, 12:51 PM IST

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும் பழைய மாமல்லபுரம் சாலை முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களைக் 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமானவரிக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாக கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமானவரித் துறை 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக் கோரியும், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும்போது, வேறொரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு மட்டுமே மாற்றம் வேண்டும் என்றும், ஆனால் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விதிகளுக்கு எதிரானது என வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும் குற்றச்சாட்டு கூறப்படும் 2015-2016 ஆகிய ஆண்டிற்கான வருமானவரி தொடர்பான மதிப்பீடு, மறு மதிப்பீடு பணிகள் ஆகிய அனைத்தையும் முடித்த பிறகு வருமானவரித் துறை இந்த வழக்கைப் பதிவு செய்தது தவறு எனவும், மறுமதிப்பீடு பணிகளை முடித்த பிறகு மீண்டும் வரி செலுத்தி அதை மறுஆய்வு செய்வது வருமானவரி சட்டப்படி தவறு என்றும் வாதிடப்பட்டது.

வருமானவரித் துறை தரப்பில், இருவரின் கணக்குகளை மறுமதிப்பீடு முடிந்தாலும், அதை மறு மதிப்பீடு செய்ய வருமானவரித் துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இருவரின் மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீ நிதியின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details