சென்னை: பூக்கடை காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள துணிக்கடை மற்றும் பேக் கடையில் கடந்த 1 ஆம் தேதி சுமார் 5 லட்சம் மற்றும் 1.5 லட்சம் பணம் கொள்ளை போனதாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கடைகளின் மேற்கூரை உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆனால் கடைகளின் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் அரங்கேறிய கடைகளின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு நபர் ஆட்டோவில் கடையின் பின் பகுதிக்கு வந்ததும் கடையின் பின்பக்கமாக பல அடி உயர சுவர் மீது ஏறி கூரையை உடைத்து உள்ளே இறங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் பின் 3 மணி நேரம் கழித்து வெளியே வந்து தப்பி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின் ஆட்டோ எங்கிருந்து வந்துள்ளது என்பதை போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் அந்த நபர் திருவல்லிக்கேணியில், தான் வந்த சைலோ காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து பூக்கடை பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்தது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் கொள்ளையன் வந்த சைலோ கார் சென்ற வழித்தடங்களை சி.சி.டி.வி பதிவுகள் மூலம் கண்காணித்தபோது கொள்ளையன் பூக்கடை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து லாட்ஜில் போலீசார் விசாரணை நடத்தியதில் கொள்ளையன் கடந்த மாதம் 27 ஆம் தேதியே சென்னை வந்து லாட்ஜில் அறையெடுத்து தங்கி கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது தெரியவந்தது.
கொள்ளையன் லாட்ஜில் கொடுத்திருந்த பெயர் மற்றும் தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்ட தனிப்படை போலீசார் பழைய குற்றப்பதிவேடுகளுடன் கொள்ளையன் பெயரை ஒப்பிட்டு பார்த்தபோது லாட்ஜில் தங்கியிருந்த கொள்ளையன் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஆனந்தன் (34) என்பதும் 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 30 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு அவர் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கொடுத்துச் சென்ற தொடர்பு எண்ணின் டவர் எங்குள்ளது என்பதை தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது அவர் மதுரையில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதேபோல அவர் வந்த சைலோ காரும் மதுரை நோக்கி பயணித்திருப்பதை வைத்து கொள்ளையன் மதுரையில் உள்ளதை போலீசார் உறுதி செய்தனர்.
பின்னர் மதுரை விரைந்த தனிப்படை போலீசார் கொள்ளையன் மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதை கண்டறிந்து அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பெரிய கடைகளை குறிவைத்து கொள்ளையடிப்பதை ஆனந்தன் வாடிக்கையாக கொண்டிருப்பதும், எந்தவித பிடிமானமும் இன்றி பல அடுக்கு மாடிகொண்ட கடைகளை சாதூர்யமாக ஏறி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.