சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஜன.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
முதன்முதலில் 1986ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1994ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மூன்று நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6 ஆயிரத்து 755 குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவினை 18.8.2005 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு 2008ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அப்பொழுதும் இந்தத் திட்டத்திற்கு கர்நாடக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து 27.3.2008 அன்று அதிமுக போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா 26.3.2008 அன்று அறிவித்தார். இதன்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒகேனக்கல்லில் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பைத் தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரும் தீர்மானம் 27.3.2008 மற்றும் 1.4.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சியில் வெறும் 18% பணிகள் நிறைவேற்றம்
இந்தச் சூழ்நிலையில், 5.4.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தெரிவிக்காமலேயே "கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் நாம் கலந்து பேசி, தேவைப்பட்டால் களம் காண்போம்" என்று கூறி அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தார் அப்போதைய முதலமைச்சர்.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், அரசியல் உறுதி மிக்க அரசுதான் மக்களுக்குத் தேவை என்றும், அத்தகைய அரசை அதிமுக வழங்கும் என்றும் சட்டமன்றத்திற்கு வெளியே அறிவித்தவர்.