தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Bangalore Bandh : பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்! தமிழக பேருந்துகள், வாகனங்கள் இயங்கவில்லை! - Cauvery water issue karnataka Bandh

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், கர்நாடக எல்லை பகுதிக்கு அத்தியாவசிய பணிகள் தவிர்த்து தமிழர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Karnataka
Karnataka

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 6:55 AM IST

பெங்களூரு :தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து பெங்களுரூவில் இன்று முழுஅடைப்பு போராட்டம் கடைபிடிக்கப்படுகிறது. பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்தது.

சட்ட ரீதியாக தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டு நீர் திறக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட மறுப்பு தெரிவித்தும் கர்நாடக விவசாய சங்கங்கள், தனியார் அமைப்புகள், ஆட்டோர ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி கர்நாடகாவின் மாண்ட்யா மாவட்டத்தில் விவசாய அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகள் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று (செப். 26) மீண்டும் விவசாய மற்றும் தனியார் அமைப்புகள் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் விவசாய அமைப்புகள், தனியார் அமைப்புகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் சங்கங்கள், தனியார் கல்வி நிறுவன சங்கங்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் கர்நாடக திரைத் துறை முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக இரு மாநில எல்லைகளிலும் பதற்றம் நிலவுகிறது. கடந்த 24ஆம் தேதி கர்நாடக எல்லையில் தமிழக லாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று போராட்டம் நடைபெறுவதால் தமிழக லாரி ஓட்டுநர்கள் கர்நாடக எல்லை பகுதியில் செல்ல வேண்டாம் என லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வரும் 29ஆம் தேதி மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய மற்றும் தனியார் அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் நேற்று (செப். 25) இரவு 8 மணி முதல் நிறுத்தப்பட்டது. இது குறித்து அரசு போக்குவரத்துறை அதிகாரி கூறும்போது, "பெங்களுருவில் நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் இரவு 8 மணி முதல் நிறுத்தப்பட்டது.

இதில், சேலம் கோட்டத்தில் 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் 80 பேருந்துகள் என மொத்தம் 430 பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு செல்லாது. அதேபோல், பெங்களூரு சென்றுள்ள பேருந்துகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் தமிழ்நாட்டிற்கு திருப்பி கொண்டு வரப்படும். அதேபோல் பல்வேறு பணிகளுக்கு பெங்களூர் சென்றுள்ள தமிழர்கள் மீண்டும் தமிழ்நாடு வருவதற்கு வசதியாக நகர பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான ஜூஜூவாடி வரை சென்று பயணிகளை அழைத்து வரும்" என்று கூறினார்.

இதையும் படிங்க :காவிரி விவகாரம்: பெங்களுருவில் முழு கடையடைப்பு.. 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details