சென்னை:கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக - காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதற்காக கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறது. கர்நாடகாவின் புலிகேசி தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக சார்பாக 3 வேட்பாளர்கள் போட்டி என அறிவித்தனர். இதில் புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், வேட்புமனு பரிசீலனையில் புலிகேசிநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கு முறையாக படிவத்தை பூர்த்தி செய்யவில்லை, நேரம் கடந்து சமர்ப்பிப்பு போன்ற காரணங்கள் கூறப்பட்டன. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் கோலார் தங்கவயல் வேட்பாளர் அனந்தராஜூம் வேட்புமனுவை சுயேட்சையாக கருதி ஏற்றுக்கொண்டது. காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரின் வேட்புமனு அதிமுக என ஏற்றுக்கொள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.