சென்னை:காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளை படைத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (எ) சூரியதீபன் நேற்று (அக் 23) இயற்கை எய்தினார். இவர் தனது படைப்பு மற்றும் செயல்பாடுகளில் சமூக அக்கறை சார்ந்து வெளிப்படுவதில் கவனம் கொண்டவர்.
எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில், சமூகத்தின் மனசாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன். சமகாலப் படைப்புக் கலைஞனான இவர், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழம் உடையவர்.
கவித்துமான மொழியில் இவரது தொடக்க காலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பிண்ணிப் பிணைந்தவாறு இவரது கதைகளில் வெளிப்பட்டன. இப்படிப்பட்ட செயப்பிரகாசம், தனது முதுகலை தமிழ் படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார்.
1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றினார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 10 மாணவர்களில் இவரும் ஒருவர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார்.
பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைப் பணி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளி வந்துள்ளன.
இதில் கவிதை, கதை, கட்டுரை மற்றும் உருவகக் கதைகள் எனப் பலவற்றை இவர் படைத்துள்ளார். இவரது படைப்புகள் கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ‘மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.