சென்னை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தொழிலதிபருமான ஹெச்.வசந்தகுமார் (70), கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை (ஆக.28) உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரத்தில், கடந்த 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். கடந்த 1970இல் விற்பனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய வசந்தகுமார், வசந்த & கோ என்ற நிறுவனத்தை கடந்த 1978ஆம் ஆண்டு தொடங்கினார். வீட்டு உபயோகப் பொருள்களை விற்று, தமிழ்நாடு முழுவதும் வசந்த & கோ பிரபலமானது.
நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக, கடந்த 2006ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களமிறங்கி தோல்வி அடைந்தார். இதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.