சென்னை: ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இதே நேரு விளையாட்டரங்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விளையாட்டு போட்டி சிறிய கிராமத்தையே அகதியாக்கியது என கூறினால் நம்ப முடிகிறதா?
"கொஞ்சநாள் இங்க இருங்க அப்புறமா வீடு தருகிறோம்" அரசு அதிகாரிகள் இப்படி கூறியது 1995ம் ஆண்டில். ஆனால் இந்த வார்த்தையை நம்பி, அரசு எங்கே விட்டுப் போனதோ அதே இடத்தில் 25 ஆண்டுகளாக காத்திருக்கிறது ஒரு மக்கள் கூட்டம். "இங்கு ஆசிய போட்டி நடக்க போது நீங்களெல்லம் இங்க இருக்க கூடாது. உங்களுக்கு மூனு மாசத்துல புது வீடு தருகிறோம். அது வரைக்கும் இந்த கண்ணப்பர் திடல்ல தங்கிக்கோங்க" என்ற வாக்குறுதியை நம்பி 28 ஆண்டுகளாக தங்க வீடு இல்லாமல் தவிக்கும் கண்ணப்பர் திடலில் வசிக்கும் மக்கள். தற்போதாவது அரசின் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்ற ஏக்கத்தோடு, நலத்திட்ட உதவி வேண்டி கோரிக்கை விடுகின்றனர் அப்பகுதி மக்கள்.
யார் இந்த கண்ணப்பர் திடல் மக்கள்:சென்னை மாநகராட்சியின் வார்ட் 58-க்கு உட்பட்ட, சூளை கண்ணப்பர் திடலில், 23 ஆண்டுகளாக இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்திற்க்கு ஹோம் ஃபார் ஹோம்லெஸ் (Home for homeless) என்ற பெயரும் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகை அருகே சாலையோரம் குடிசை அமைத்து, 23 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆசிய போட்டிகள் நடக்க உள்ளதாகவும், அதற்க்கு அவர்கள் இடையூறாக இருப்பதாகவும், மூன்று மாதத்தில் தங்க வீடு தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்து, அங்கிருந்து அவர்களை வெளியேற்றி சென்னை சூளை சந்திப்பு பகுதியில் கண்ணப்பர் திடலில் தங்க வைத்துள்ளனர்.
மூன்று மாதங்களில் புது வீடு என்ற காணல் வாக்குறுதி:மூன்று மாதங்களில் உங்களுக்கு புது வீடு தருகிறோம் என்று அப்போது கூறிய அதிகாரிகள், 336 மாதங்கள் கடந்தும் இன்னும் எங்களுக்கு வீடு தரவில்லை, அதற்கான எந்த ஒதுக்கீடும் செய்யவில்லை என்று அப்பகுதிகள் மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் செல்வம் கூறியதாவது, "சென்னை ரிப்பன் மாளிகை ஏதிரில் இருக்கும் இடத்தில் தான் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்தோம். அப்போது ஆசிய தடகள போட்டிக்காக, பழைய நேரு விளையாட்டு அரங்கத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் பணிக்காவும், மேலும் வெளிநாட்டு மக்கள் வருகிறார்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறோம், என்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் எங்களை தங்க வைத்தார்கள்.
உங்களுக்கு மூன்று மாதங்களில் வீடு தருகிறோம் என்று சொன்னார்கள் ஆனால் இது வரை எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு கூட இலவச வீடுகள் தரப்படுகிறது. ஆனால் சென்னையின் பூர்வகுடியாக இருக்கும் நாங்கள், அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கும் எங்களுக்கு, இத்தனை காலமாக எதுவும் செய்யவில்லை. அதிகாரிகள் வருவார்கள், பார்ப்பார்கள், கைரேகை மற்றும் விவரங்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள் அவ்வளவுதான். நாங்கள் சிறையில் இருப்பதை போல் தான் இங்கு வாழ்ந்து வருக்கிறோம். நாங்கள் என்ன பாவம் செய்தோம். இங்கு இருக்கும் 115 குடும்பங்களுக்கு நிலை என்ன?" என்று தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.
பெண்களின் வேதனை:இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சில பெண்களிடம் கேட்டப்போது, "இந்த இடத்தில் சுமார் 120 குடும்பங்கள் உள்ளன, அதில் சுமார் 400 பேர் வசிக்கின்றனர். இந்த இடத்தில் அடிப்படை வசதிகளான குளியலறை, கழிப்பறை என்று எதுவும் இல்லை. பொது கழிப்பிடத்தை தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சொல்ல போனால், சமையலறை என்பதே இங்கு இல்லை, ஐந்து ஆறு குடும்பங்களுக்கு ஒரே ஒரு சமையலறை தான். மேலும், இங்கு இருக்கும் எல்லோருக்கும் தனித்தனி வீடு எல்லாம் கிடையாது, பெரிய கூடத்தை தார்ப்பாய் போட்டு, அட்டைகளை கொண்டு அடைத்து எல்லோரும் தனித்தனி குடும்பங்களாக வாழ்ந்து வருகிறோம்" என்று கூறினார்கள்.