கற்பனை என்னும் கானல் நீருக்கு அணை அமைத்து அழகு பார்த்த கவிஞன். சமுதாயத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகளையும், வர்க்கப் பேதங்களையும், ஆன்மிக அரசியலையும் உண்மை மாறாது கூர் தீட்டி சமுதாய அவலங்களின் மீது குறிவைத்து வீசி எறிந்த மனிதன். அக்காலக்கட்டத்திலேயே 'வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை' என்று மார்க்சின் தத்துவத்தை பட்டி தொட்டியெல்லாம் பறக்கவிட்ட இளைஞன். இயற்கையாக தோன்றிய பசிக்கும் செயற்கையாகத் தோன்றிய பணத்திற்கும் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் உலகிற்கு பறைசாற்றிய ஆகச்சிறந்த கலைஞன் கவியரசு கண்ணதாசன்.
மனிதர்கள் இந்த உலகத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, அறிவியல் அறிஞர்கள் இந்த உலகத்தை உற்றுப் பார்த்து தேடிக்கொண்டிருந்தபோது, இந்த உலகத்திற்குள் ஊடுருவிப் பார்த்து, தனது எழுத்துகளின் வாயிலாக பாடல்களை காற்றில் கரையவிட்டார் கண்ணதாசன்.
அக்காலக்கட்டத்தில் பந்துலு, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பாலச்சந்தர் போன்ற இயக்குநர்கள் படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். அவர்கள் கதைகளுக்கு நடுவே எங்கு பாடல்களை வைக்கலாம் என்று எண்ணிக்கொண்டு கண்ணதாசனிடம் சென்றால், நான்கு நிமிட பாட்டிற்குள் கதை முழுவதையும் வைத்து அவர்களை மிரளவைத்து விடுவார். இதனாலேயே என்னவோ கண்ணதாசனுக்கு முன்பு வந்த பாடல்களும் சரி, பின்பு வந்த பாடல்களும் சரி, அவர் பாடல் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று ஏற்படுத்தவில்லை.
மகத்துவம் நிறைந்த வாழ்க்கையையும், பிரமாண்டம் நிறைந்த வாழ்வியலையும் அறிய நினைப்பவன் புராணங்களையும் இதிகாசங்களையும் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை, கண்ணதாசனின் பாடலின் நான்கு வரிகள் அதை உணர்த்திவிடும். அதற்கு
'கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்.
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்.
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்.
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்.
படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்.'
என்ற ஒரு பாடல் உதாரணம். இந்தப் பாடலில் படைத்தவனின் அந்தக் கடைசி ஒற்றைச் சிரிப்புதான் வாழ்வியலின் தத்துவம். இதனை கடைக்கோடியில் இருக்கும் பாமரனின் செவிகளுக்கு, அவனுக்கு புரியும் வண்ணம் கண்ணதாசன் கொண்டு சேர்த்தார்.
வாழ்க்கையை வெறுத்து, விரக்தியின் உச்சநிலையில் நின்று கொண்டிருக்கும் ஒருவன்,
'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால்
பயணம் தொடரும்!
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால்
காட்சிக் கிடைக்கும்!
காட்சிக் கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்'