சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கை வழக்கறிஞர் கண்மணிக்கு, வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் நேரில் வழங்கினார். உயர் நீதிமன்ற வளாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கௌரி ரமேசும் உடனிருந்து, பாராட்டுத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமல்ராஜ், ஒவ்வொரு ஆண்டும் சட்டம் படித்து வழக்கறிஞராகப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பிற மாநிலங்களில் படித்து தமிழ்நாடு கவுன்சிலில் பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் ஆவணங்கள் முறையாக ஆராய்ந்து பிறகே, பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகளின் பதவி இடங்களில் உள்ள 19 காலியிடங்களை கொலீஜிய பரிந்துரைகளை ஏற்று, சமூக நீதியை கடைப்பிடித்து, தாமதம் இல்லாமல் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் தென் மண்டல அமர்வை அமைக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வரும் கோரிக்கையில், பார் கவுன்சிலும் துணை நிற்பதாக தெரிவித்தார்.