சென்னை: ஹீமோபிலியா மற்றும் முதுகெலும்பு தசைச் சிதைவு (Hemophilia and spinal muscular atrophy) என்ற அறிய வகை நோய்களுக்கான விழிப்புணர்வு குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அதில் மருத்துவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என்.சோமு செய்தியாளர்களை சித்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஹீமோபிலியா மற்றும் முதுகெலும்பு தசைச் சிதைவு போன்ற அறிய வகை நோய்கள் பரம்பரையாக வரும் ஜெனிடிக் வகை நோய்கள். இது குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கிடும் பணிகளைக் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மீதான விவாதத்தின் போது, அரியவகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி குறைக்க வேண்டும் எனவும், குறிப்பாக ஹீமோபிலியா மற்றும் முதுகெலும்பு தசைச் சிதைவு போன்ற நோய்களுக்கான மருந்துகள், தடுப்பூசிகளின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்த நோய்கள் குறித்து கர்ப்பிணி தாய்மார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கே விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதனால், ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மார்களும் கருவுற்ற பின் ஜெனிடிக் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அந்த பரிசோதனையில் 23 ஆயிரம் ஜீன்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.