மத்தியில் பாஜக ஆட்சியமைத்ததிலிருந்து தேசிய மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலித்து வருகின்றன. இதனிடையே திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாததால் நீங்கள் இந்தியரா? என சிஐஎஸ்எஃப் அலுவலர் கேள்வி எழுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளின்போது தனியார் பத்திரிகையில் அவர் கொடுத்த பேட்டியில், இந்தி மொழி தெரியாததால் விமான நிலையத்தில் தனியாக நிற்க வைத்து விசாரணை நடத்திய விவகாரம் பற்றி பேசினார். இதுவும் மக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 5) இரவு திடீரென இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக 'இந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது. அதனுடன் சேர்த்து இந்தி தெரியாது போடா என்ற டீ-சர்ட்கள் அணிந்து நட்சத்திரங்களும், இளைஞர்களும் புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினர். இது காட்டுத் தீ போல் பரவி சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக பதிவுகள் வெளிவந்தன.