சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சற்குண பாண்டியன் மகனும், திமுக மாநில மகளிரணி பரப்புரைக் குழு உறுப்பினர் சிம்லா முத்துச்சோழனின் கணவருமான எஸ்.பி. முத்துச்சோழன் என்ற பாபு மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.
வண்ணாரப்பேட்டை லாயர் சின்னத்தம்பி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உறங்கச்சென்றவர், நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.
அவர் இருந்த அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். அவரை, உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, தூக்கத்திலேயே முத்துச்சோழன் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வண்ணாரப்பேட்டை லாயர் சின்னத்தம்பி தெருவிலுள்ள சற்குண பாண்டியன் வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி இன்று அஞ்சலி செலுத்தினார். முத்துச்சோழனின் மனைவி சிம்லா முத்துச்சோழன் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பாஜகவைத் தவிர வேறு எந்தக்கட்சியாலும் கட்சத்தீவை மீட்கமுடியாது'- பாஜக வழக்கறிஞர் மவுரியா