சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறை மரண விவகாரம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த வழக்கைக் கையிலெடுத்துள்ள சிபிசிஐடி, இதனை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களைக் கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளது.
இந்த விவகாரத்திற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்துவரும் திமுக எம்பி கனிமொழி தற்போது உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்ததில் விசாரணை மரணங்கள், காவல் துறை சித்ரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், “இந்தியா முழுவதும் நடக்கும் விசாரணை மரணங்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபோன்று காவல் துறை சித்ரவதைகளால் மரணிப்பவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
2010ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இதற்கு எதிரான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. மே 6ஆம் தேதி அம்மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்பின், ராஜ்யசபா ஆகஸ்ட் 31ஆம் தேதி மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது. தேர்வுக்குழு தன்னுடைய ஆய்வு முடிவை டிசம்பர் 6ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டாலும், 2014ஆம் ஆண்டு 15ஆவது மக்களவை முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் அப்படியே நின்றுபோனது.