தெற்கு ரயில்வே, தனது அலுவலர்களை கட்டாயம் இந்தி, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழில் பேசக் கூடாது... கண்டிஷன் போட்ட ரயில்வே! கண்டித்த கனிமொழி - இந்தி திணிப்பு
சென்னை: அலுவலர்கள் இனிமேல் தமிழில் பேசக் கூடாது என்று தெற்கு ரயில்வே சுற்றறிக்கை வெளியிட்டதற்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "மத்திய அரசு ஏற்கனவே இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக ரயில் நிலைய அலுவலர்கள் இனிமேல் தமிழில் பேசக் கூடாது, இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் பேச வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை தென்னக ரயில்வே மேலாளரால் அனுப்பப்பட்டுள்ளது.
வட மாநிலத்தவர்கள் நிறைய பேர் தென்னக ரயில்வே துறையில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இது நிரூபிப்பது போல் உள்ளது. இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இத்தகைய செயல்களில் இனிமேலும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.