திமுக மாநில மகளிர் அணி செயலரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, சேலம் மாவட்டத்தில் இருந்து நாளை (நவ.27) தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இதையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, அவரது தந்தை கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் இன்று (நவ.28) மலர்த்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு திமுக மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
”முதலமைச்சர் தொகுதியில் பரப்புரையைத் தொடங்குவதில் உள்நோக்கம் இல்லை” - கனிமொழி - திமுக மாநில மகளிர் அணி செயலர்
சென்னை : திமுக மகளிர் அணி செயலர் கனிமொழி நாளை சேலத்தில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சரின் தொகுதியில் பரப்புரையைத் தொடங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சரின் தொகுதியில் பரப்புரையைத் தொடங்குவதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், முன்கூட்டியே தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளோம். 144 தடை உத்தரவைக் காரணம்காட்டி ஏற்கனவே பரப்புரையைத் தொடங்கிய திமுக இளைஞரணி செயலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
144 தடை உத்தரவு நாளையோடு முடிவடைகிறது. திமுகவினர் ஒருபோதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சுபவர்கள் இல்லை. எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் திமுக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும். திமுகவின் சாதனைகளையும் அதிமுக ஆட்சியின் அவலநிலையையும் முன்வைத்து எங்கள் பரப்புரை இருக்கும்” எனத் தெரிவித்தார்.