தமிழ்நாடு

tamil nadu

காமராஜர் பிறந்தநாள்- பள்ளிகள் நாளை செயல்படும்!

By

Published : Jul 14, 2023, 5:02 PM IST

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் முழு வேலை நாளாக இயங்கும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

kamaraj birthday
காமராஜர் பிறந்தநாள்

சென்னை: காமராஜர் பிறந்த நாள் விழா நாளை (ஜுலை 15ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கொண்டாடப்பட உள்ளதால், சனிக்கிழமையிலும் பள்ளிகள் முழு வேலை நாளாக இயங்கும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்கப் பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டுக் கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாள் "கல்வி வளர்ச்சி நாள்" என அரசு அறிவித்தது.

அந்த நாளில் பள்ளி மாணவர்கள் புத்தாடை அணிந்து விழா எடுத்து காமராசர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட செய்திட வேண்டும். இந்த விழா பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடப்பது சிறப்பாக அமையும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், இந்த 2023-2024 ஆம் கல்வியாண்டில் நாளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என அரசு அறிவித்து உள்ளது. கல்விக்கண் திறந்த காமராசர் அரும்பணிகள் குறித்து உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி ஒவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்திடவும், பரிசுகள் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி முன்னதாக அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழு வேலைநாளாக இயங்கும் எனவும், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், காமராஜர் பிறந்தநாளான நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை நங்கநல்லூரில் உள்ள நேரு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் தென் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் அறிவு பசியை போக்குவதற்கு கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details