நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்த நாள் முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் அதனை பாஜக கட்சியின் மற்றொரு வடிவம், பி டீம் என விமர்சித்துவந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பது சரியானது அல்ல என கமல் காணொலி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தக் காணொலிக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்பும் ஆதரவும் வந்தன.
தற்போது கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்" என ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.