உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி கடந்த வாரம் உயிரிழந்தார். அவரின் உடல் தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாரத ரத்னா, தாதாசாகிப் அகிய விருதுகளை தர வேண்டும் என்று திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கூறி வருகின்றனர்.
அந்தவகையில் எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ”ஆந்திரா நெல்லூரில் பிறந்தவர் மியூசிக் மேஸ்ட்ரோ எஸ்.பி. பாலசுப்ரமணியம். இசை உலகையும், ரசிகர்களையும் மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு எஸ்,பி.பி சென்றுவிட்டார். தனது இசை பயணத்தில் 40 ஆயிரம் பாடல்களை கொடுத்த அவருக்கு இந்திய அரசு இதுவரை பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருது வழங்கியுள்ளது. அதேபோல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென உங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நன்றி. எங்கள் சகோதரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நீங்கள் கிடைக்க வேண்டும் என நினைக்கும் மரியாதை, அவரது ஒவ்வொரு உண்மையான ரசிகர்களின் குரலாகும். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இதே குரல் ஒலிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.