சென்னை :சனாதனத்தின் மீதான தனது பார்வையை உதயநிதி ஸ்டாலின் கருத்தாக தெரிவித்து உள்ளதாகவும் அந்த கருத்தின் மீது உடன்பாடு இல்லாதவர்கள் அவருடன் விவாதம் செய்யலாம் என்றும் ஆனால் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அந்த கருத்தை திரித்து கூறக் கூடாது என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்குவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து பெறும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பர்மஹன்ஸ் ஆச்சார்யா சாமியார், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் தருவதாகவும், அல்லது யாரும் முன்வராவிட்டால் தானே தலையை சீவுவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், தமிழகம் முழுவதும் பர்மஹன்ஸ் ஆச்சார்யா சாமியாருக்கு எதிராக திமுகவினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிப்பது என திமுகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனிடையே, சனாதன சர்ச்சை கருத்து குறித்து கட்சித் தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், தன் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும், உத்தர பிரதேச சாமியாருக்கு எதிராக கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்ட கருத்து என்னவென்று புரியாமல் பிரதமர் மோடி பதில் கருத்து வெளியிட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சனாதனத்தின் மனிதாபிமானமற்ற கொள்கைகள் குறித்து மட்டுமே அமைச்சர் உதயநிதி கருத்து வெளியிட்டதாகவும், அவரது கருத்து, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சனாதனக கொள்கைகள் குறித்தே இருந்ததாகவும் எந்த மதத்தையும், அதன் நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடும் திறன் ஆகும். சரியான கேள்விகளைக் கேட்பது முக்கியமான பதில்களுக்கு வழிவகுத்தது மற்றும் ஒரு சிறந்த சமூகமாக நமது வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதனத்தைப் பற்றிய அவரது கருத்துகளை கூற உரிமை உண்டு. அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது சட்டரீதியான மிரட்டல் யுக்திகள் அல்லது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உணர்ச்சிபூர்வமான பதில்களைத் தூண்டும் வகையில் அவரது வார்த்தைகளை திரித்துக் கூறாமல், சனாதனத்தின் தகுதியின் அடிப்படையில் அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம்.
ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது. அது தொடர்ந்து இருக்கும். நமது பாரம்பரியம், சமத்துவம், உள்ளடக்க உறுதி, முன்னேற்றத்திற்கான வழிவகைகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது என்றும் இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்" என்று அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :MK Stalin: "உதயநிதி கூறியது குறித்து விவரம் புரியாமல் பிரதமர் மோடி கருத்து" - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!