சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபஸ்ரீ, கடந்த வியாழன் அன்று பைக்கில் செல்லும்போது அதிமுக பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் பேனர் வைப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றனர்.
நடிகர் சூர்யா, விஜய் போன்றவர்கள் தங்கள் ரசிகர்களிடம் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்க சொல்லியிருக்கின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Kamal meet subhasree family அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பெற்றோர்கள் மனம்தேறி வரும்வரை அவர்கள் மீது எந்தக் குற்றத்தையும் சொல்லக் கூடாது. நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை, சுபஸ்ரீ மீது தவறு சொல்லியிருக்கக் கூடாது. இனியாவது திருத்திக் கொள்ளுங்கள், பேனர் வைப்பது தவறான செயல். எங்கள் கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வலியுறுத்துவேன். அதேபோல் சினிமா ரசிகர்களும் பேனர் வைக்கக் கூடாது என கட்டளையாகவே சொல்கிறேன். அந்த அன்புக் கட்டளையை அவர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
மேலும், பேனர் வைத்த நபர் கைது செய்யப்படாமல் இருப்பது பற்றி கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அவர்கள் பல குற்றங்கள் செய்திருக்கிறார்கள். ரொம்ப நாள் ஓடி ஒழியமுடியாது, குற்றத்துக்கு தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.