கோவை தெற்கு சட்டபேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிடுகிறார். அதேதொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸில் இருந்து மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் கோவை தெற்குப் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் சக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், "கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழ வேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும்.
நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள். எல்லோரும் மக்கள் பணி செய்ய வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால், அது மிகப் பெரிய ஜனநாயக நாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ, நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி முன் கதவில் கோவை தெற்குத்தொகுதி இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டும் என விரும்புகிறேன்" என எழுதியுள்ளார்.