சென்னை:மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் நேற்று கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "வறுமையின் பிடியில் உள்ள போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான உலக நாயகர்கள். இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஒரு பெரிய பேரரசு கூட 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.
சுய மரியாதையும் விளையாட்டும்
இந்தியாவின் தங்கச்சுரங்கம் நீங்கள். இது வெறும் தங்கப் பதக்கத்திற்காக அல்ல. நீங்கள் கற்றவையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அது நீங்கள் செய்யவேண்டிய கடமை.