சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சார்பில், மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் தயாரித்து அளிக்கும் இயந்திரத்தை கமல்ஹாசன் வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், "இது என் பிறந்தநாள் என்பதை விட, முக்கியமான ஒரு நல்ல நாள். இதில் அரசியல் ஆதாயம் கடந்து மனித நேயம் சம்பந்தப்பட்டது. நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா. மனிதம் சார்ந்து, நான் உள்பட அமைச்சர்கள் வந்துள்ளோம். இந்த வாயு ஜெல் என்ற இயந்திரத்தை ராஜ் கமல் நிறுவனத்தில் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்.