தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடத்தப்படுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை ஆலந்தூரில் நேற்று (மார்ச் 3) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கினார்.
இதற்காக சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையைத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வந்தடைந்த அவருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆதம்பாக்கம், மெளலிவாக்கம், ஆலந்தூர் மீன் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆலந்தூரில் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கிய கமல்ஹாசன்! அப்போது மக்களிடையே பேசிய அவர், “மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தொகுதியிலிருந்து பரப்புரையை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு முக்கியமான ஒரு பயணம். மாற்றத்திற்கான நல்ல தொடக்கம். மாற்றம் என்பது இனி உங்கள் கையில்தான் உள்ளது. மாற்றத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு தயார் ஆகிவிட்டது என்பதை சொல்லி தெரியவேண்டிய அவசியம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பதவியை விரும்பாமல் மக்கள் பணி செய்யக் கூடியவர்கள். தொண்டர்கள் அதிகளவில் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பெருகி வருகின்றனர். நான் செல்ல வேண்டிய இலக்கிற்கு நீங்கள்தான் என்னை கொண்டு சேர்க்க பேண்டும்.
மாற்றம் கொண்டுவர மக்கள் நீதி மய்யம் கட்சி வந்துள்ளதாக சிலர் மகிழ்ச்சி அடைகின்றனர். ‘அய்யோ இவர்கள் வந்துவிட்டார்களே!’ என பதறிக்கொண்டு சிலர் இருக்கின்றனர்.
இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் தமிழ்நாட்டு மக்களின் விரோதிகளாகவே இருந்தனர். அதனால் தான் அவர்களை அகற்ற வேண்டுமென மக்கள் கூறுகின்றனர். அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை. நாங்கள் பழிவாங்கும் அரசியல்வாதிகள் அல்ல, பழிபோடும் அரசியல்வாதிகளும் அல்ல.
மாற்றத்தை தேடும் மக்களுக்கு வழிகாட்ட பிரச்னைகளுக்கு அறிவார்ந்தவர்களுடன் ஆலோசித்து பட்டியல்களை வெளியிடுகிறோம். ஆலந்தூர் தொகுதி மக்களின் பிரச்னைகள் எங்களுக்கு நன்கு தெரியும். அதை தீர்ப்பதற்காகவே மக்கள் நீதி மய்யம் தற்போது அரசியல் களத்திற்கு வந்துள்ளது.
உங்கள் குடிநீர் பிரச்னை பற்றி நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். போக்குவரத்து நெரிசலை நானே அறிந்து கொண்டிருக்கின்றேன். ஆதம்பாக்கம் ஏரி இன்னும் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இந்தொகுதியில் பெண்களுக்கான மகளிர் அரசு கல்லூரி அமைக்க வேண்டும்.
ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இந்த தொகுதி பக்கமே வரவில்லை என்பதை நான் அறிவேன். அவர் மீது பத்திற்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளது. இனி வரும் சட்டப்பேரவை உறுப்பினரை நல்லவராகவும், வல்லவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளோம்.
எதிர்வரும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றால், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
சாதி பார்த்து வாக்களிக்கக் கூடாது. தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல. எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என மக்கள் சொல்ல வேண்டும். எங்களுக்கு நீங்கள் தான் கை கொடுக்க வேண்டும். மக்களுக்கான பணியை நான் மட்டும் செய்ய முடியாது, நீங்களும் சேர்ந்து செய்ய வேண்டும்.
வெள்ளையர்களை வெளியேற்றியது போல் இந்த கொள்கைகளையும் வெளியேற்ற வேண்டும். அதற்கு மக்கள் கை கொடுத்தால் முடியும். எங்கள் கட்சியில் அதிக அளவில் இருப்பவர்கள் பெண்கள்தான். தாய்மார்களின் உரிமைகள் காக்கப்பட்டால் தான் தான் வீடும், நாடும் நன்றாக இருக்கும். இல்லதரசிகளுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது நமது முழக்கம்.
எல்லோருக்கும் வேலை கொடுக்கும் வேலையை செய்ய இருக்கிறோம். அனைவரும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். வீட்டுக்கொரு கணினி கொடுக்க வேண்டும். அது இலவசமல்ல. அரசும் மக்களும் நேரடியாகப் பேசி கொள்வதற்கான ஆயுதம். நேர்மையான ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைவரும் ஒன்று கூடி தேர் இழுத்தால் நாளை நமதே” என்றார்.
இதையும் படிங்க :செம்மொழி விருது கோரிய வழக்கு: இது அரசியல் முடிவு என தள்ளுபடி செய்த நீதிமன்றம்