சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (அக்.22) மாலை பலத்த மழை பெய்தது. மழையால் மாநகரின் மத்தியப் பகுதியான அண்ணா சாலை, எழும்பூர் போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கியது. எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இரண்டு அடிகளுக்கு மேல் தண்ணீர் தேங்கியதால், மழை நீர் மருத்துவமனைக்குள்ளும் சென்றது.
ஒரு மணி நேர மழையில் தள்ளாடுகிறது தமிழ்நாடு - கமல்ஹாசன் - கமல்ஹாசன் ட்விட்
சென்னை: ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழ்நாடு தள்ளாடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழ்நாட்டின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை.
கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள்” என்று அதில் குற்றம்சாட்டியுள்ளார்.