சென்னை:கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை 2 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், 2024 டிசம்பரில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இக்கோயில் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு ஜூலை முதல், மாதம் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வாடகையாக கணக்கிட்டு ஒரு மாதத்தில் கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவும், வாடகை பாக்கியை கோயில் நிர்வாகத்துக்கு வழங்கவும் மற்றும் கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும் கோயில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.
இதையும் படிங்க:"அருகில் இடம் இருக்க வெகு தூரத்தில் எதற்கு?" - திருச்சி மகப்பேறு மருத்துவமனை வழக்கில் அரசுக்கு அவகாசம்!