சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டு, ஜூலை 17ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு அளித்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வந்தபோது, மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவரது ஜாமீன் மனுவை விசாரிக்கக்கூடாது என சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் பள்ளியின் தாளாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். இந்த மனுவில், “மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதைக்காரணம் காட்டி, எனது ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்காமல் எனது மனுவை விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.