சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலில்ஏற்கனவே இரண்டு முறை உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது உடற்கூராய்வு செய்வதால் புதிதாக ஏதேனும் கண்டறிய முடியுமா? என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் செல்வகுமாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், மூன்றாவது உடற்கூராய்வில் புதிதாக எதுவும் கண்டறியவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என கூறியதால் மூன்றாவது உடற்கூராய்வு தேவையில்லை எனவும் முடிவு செய்யப்படுகிறது. தொடர்ந்து உயிரிழந்த மாணவி ஶ்ரீமதிக்கு பாலியல் தாக்குதல் ஏதும் நடந்திருந்தால், அதுகுறித்து உடற்கூறாய்வின் வீடியோ பதிவில் அறிய முடியுமா என்ற நீதிபதி கேள்விக்கு, அறிய முடியும் என மருத்துவர் செல்வக்குமார் பதிலளித்துள்ளார்.
மேலும், ஜிப்மர் குழுவுக்கு மாணவி தந்தை தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததால் ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இரண்டு முறை நடைபெற்ற உடற்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் சித்தார்த் தாஸ், பேராசிரியர் குஷா குமார் சாஹா, கூடுதல் பேராசிரியர் அம்பிகா பிரசாத் பட்ரா ஆகியோர் கொண்ட குழு நியமனம் செய்யப்படுகிறது.