சென்னை:கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் புலன் விசாரணையைப் பாதிக்கும் வகையில் காணொலிக்காட்சிகளை பதிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு(சிபிசிஐடி) மாற்றப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. இவ்வழக்கின் புலன்விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.
இது தொடர்பாக சிபிசிஐடி விடுத்துள்ள வேண்டுகோளில் சமூக ஊடகங்கள், பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக்கருத்துகளையும், அறிக்கைகளையும் காணொலி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மேலும் இது சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையின் புலன்விசாரணையைப்பாதிக்கும் வகையில் அமைகின்றது; இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; வலைதள கணக்குகள் மற்றும் யூ-ட்யூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வழக்குத்தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அலுவலரின் அலைபேசி எண்.9003848126-க்கு நேரடியாக பகிரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவியின் சடலம் அகற்றப்பட்டதாக கூறப்படும் வீடியோ - வைரல்!