தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்திரா பாலியல் புகார் விவகாரம்: கல்லூரி இயக்குநர் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவு - மாநில மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை கலாஷேத்திரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், கல்லூரி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நாளை மறுநாள் (ஏப்ரல் 3) நேரில் ஆஜராக, மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Kalakshetra
கலாசேத்திரா

By

Published : Apr 1, 2023, 6:11 PM IST

சென்னை:திருவான்மியூரில் உள்ள கலாஷேத்திரா கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி, தனது தோழியுடன் நேற்று (மார்ச் 31) அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கலாஷேத்திரா கல்லூரியில் தாம் படித்த காலத்தில், பேராசிரியர் ஹரிபத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதையடுத்து ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ஹரிபத்மன், கலாஷேத்ரா கல்லூரியில் கேரள மாணவியை போன்று எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஐதராபாத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரை சென்னைக்கு வரவழைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் சென்னை வந்த பின், விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறவும் மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். பேராசிரியர் ஹரிபத்மன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கலோஷேத்ரா கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குநர் பத்மாவதி ஆகியோரை நாளை மறுநாள் (ஏப்ரல் 3) விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் பாலியல் தொல்லை தொடர்பாக எத்தனை மாணவிகள் புகார் அளித்துள்ளனர், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, பாலியல் குற்றங்களை தடுக்கும் கமிட்டி நடத்திய விசாரணை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை, இருவரிடமும் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்த நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: ஆட்சியர் முறையாக செயல்படவில்லை என புகார்

ABOUT THE AUTHOR

...view details