சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் மீது நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தென் சென்னை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்(AIDWA), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம்(SFI) அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், கல்லூரிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ராதிகா, "கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் பாலியல் ரீதியாக வன்முறை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் எழுந்த உடன் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை செய்தது. ஆனால், ஏதோ நிர்பந்தம் காரணமாக அந்த விசாரணையை திரும்பப்பெற்றது. மீண்டும் விசாரணையினை தொடங்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் புகார் தெரிவிக்கும் மாணவிகளுக்கு அச்சுறுத்தல் தருவதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ள நிலையில் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் போக்குகளை உடனடியாக கைவிட வேண்டும்.
போராட்டம் நடத்தும் மாணவ, மாணவிகளைக் கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகள் மீது அக்கறை இல்லாத கல்லூரியாக கருதப்படுகிறது. எனவே, பேராசிரியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் கல்லூரி நிர்வாகத்தில் இந்தப் புகாருக்கு உடந்தையாக செயல்படும் அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசுக்குக் கீழ் வரும் கல்வி நிறுவனம் என்பதால் தேசிய மகளிர் ஆணையம் மூன்று மணி நேரம் மட்டுமே விசாரணை மேற்கொண்டது. அதுவும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளாமல் கல்வி நிர்வாகத்திடம் மட்டும் விசாரணை மேற்கொண்டு சென்றுவிட்டார்கள். எனவே, மீண்டும் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
ஏற்கனவே குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற வேண்டும் என முதலமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளோம். தேவைப்பட்டால் இந்த நிகழ்வு தொடர்பாகவும் நாங்கள் எழுத்துப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுப்போம். இந்த விசாரணையில் ஏதாவது சிறு தவறு நடந்தாலும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் விரிவடையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Kalakshetra: கலாஷேத்ரா புகாரின் விசாரணை நிலை என்ன? - மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி புதிய தகவல்!