சென்னை:கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கலைக் கல்லூரியில் பணிபுரியும், ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று நடன உதவியாளர்கள் கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டு வருவதாக, பல முறை புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் புகாருக்கு ஆளான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரியில் தொடர்ச்சியாக இதுபோன்று, அந்த நான்கு பேர் பாலியில் துன்புறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர் என நான்கு மாதங்களாகத் தெரிவித்து வருவதாகவும், ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்த நிலையில், நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில், மாணவர்களுடனும் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி 6-ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும் ,இரண்டு நாட்களில் விடுதியிலிருந்து மாணவிகள் வெளியேற வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.