சென்னை: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு படித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்தனர்.
பின்னர் போலீசார் மாணவியின் புகாரின் அடிப்படையில் ஹரி பத்மனிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மிகவும் சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரத்தில் நேர்கொண்ட பார்வை, நோட்டா படங்களில் நடித்த நடிகை அபிராமி ஹரி பத்மனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மே முதல் வாரம் ஹரி பத்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.