சென்னை: சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக்கட்டையின் ருக்மணி தேவி கலை கல்லூரியில், பேராசிரியர், ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவாகரம் பூதாகரமானது.
பின்னர், கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியரான ஹரி பத்மன் மீது புகார் அளித்தார். அதன் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு ஹரி பத்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று(ஏப்.11) இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால், ஹரி பத்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியதன் அறிக்கையை அதன் தலைவர் குமரி, தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் அளித்துள்ளார். அதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை செய்ய வேண்டும் - இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு புகார் தெரிவிக்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்துள்ள பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - கல்லூரியின் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் - பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளனர்.