தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாசேத்ரா கல்லூரி விவகாரம்.. பேராசிரியைகளுக்கு தொடர்பு.. ஹரிபத்மன் மனைவி பரபரப்பு புகார்.. - hari padman wife complaint

இரண்டு பேராசிரியைகளின் தூண்டுதலின் பேரிலேயே முன்னாள் மாணவி, தனது கணவர் மீது பாலியல் புகார் அளித்ததாக, ஹரிபத்மன் மனைவி காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கலாசேத்ரா கல்லூரி விவகாரம்
கலாசேத்ரா கல்லூரி விவகாரம்

By

Published : Apr 5, 2023, 9:47 PM IST

சென்னை:கலாசேத்ரா கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கலாசேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஹரிபத்மனின் மனைவி திவ்யா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் கலாசேத்ரா கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, அதே கல்லூரியில் பேராசிரியராக 2003ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன்.

இந்த கல்லூரியின் பேராசிரியைகளான நிர்மலா நாகராஜன் மற்றும் நந்தினி நாகராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பெயரிலேயே முன்னாள் மாணவி எனது கணவர் ஹரிபத்மன் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலாசேத்ரா கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது, எனது கணவர் ஹரிபத்மனை, பேராசிரியர் ஜனார்த்தனன் அனைவரது முன்னிலையிலும் வாழ்த்தி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியதை பாராட்டினார். இந்த பாராட்டு பேராசிரியைகள் நிர்மலா மற்றும் நந்தினிக்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக முன்னாள் மாணவியை தூண்டிவிட்டு அவர் மீது பாலியல் புகார் கொடுக்க வைத்துள்ளனர்.

அதேபோல எனது கணவர் மீது புகார் கொடுத்த முன்னாள் மாணவி, பாலியல் தொல்லையால் கல்லூரியை விட்டு சென்றதாக பொய் கூறியிருக்கிறார். இவர் கனடா நாட்டிற்கு செல்வதற்காகவே கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி சென்றார். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாலியல் தொல்லை சம்பவம் நடந்ததாக முன்னாள் மாணவி குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனது வீட்டில் நடந்த எங்களுடைய மகனின் பிறந்த நாள் விழாவுக்கு அந்த மாணவி வருகை தந்துள்ளார்.

அதுமட்டுமின்றி மாணவி கல்லூரியை விட்டு சென்ற பிறகு, அவரது பேஸ்புக் பக்கத்தில், எனது கணவர் ஹரிபத்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த மாணவி ஏதோ காரணமாக பழிவாங்கும் நோக்கில் நான்கு வருடம் கழித்து புகார் அளித்துள்ளார். ஆகவே, பொய் புகார் கொடுத்து எனது கணவரை சிறைக்கு அனுப்பிய 2 பேராசிரியைகள் மற்றும் முன்னாள் மாணவி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கலாஷேத்ரா பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைப்பு.. யார் யார் இடம்பெற்றுள்ளது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details